காரியாபட்டி, : காரியாபட்டி பகுதியில் நடக்கும் இயற்கை பேரிடர்கள், தீ விபத்து, சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு பேரிடர் மீட்பு பணிகளுக்கு அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருக்கும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை இருந்தது. அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடும். அப்படிப்பட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்ததால், பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனதும் உண்டு. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று காரியாபட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன் தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட்டு, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. காரியாபட்டி, மல்லாங்கிணர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கிருமி நாசினி தெளித்து, பேரிடர் மீட்பு பணிகளை துரிதமாக செய்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருவதால் தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகக் குறைவு. அது மட்டுமல்ல ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது. உணவு உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் நீண்ட தூரம் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, காரியாபட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடம் தயார் செய்வது அவசியம்
அழகர்சாமி, தனியார் ஊழியர், காரியாபட்டி: கட்டடம் கட்ட தற்போதுள்ள வாடகை கட்டடத்திற்கு எதிரிலே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் அலுவலர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். ஆத்திர அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல ஒரு வழி பாதையாக இருப்பதால் கட்டுமான துறை அதிகாரிகள் சான்றிதழ் கேட்டுள்ளனர். ஒருவேளை போதுமான இடம் இல்லாததாக இருந்தால் உடனடியாக மாற்று இடத்தை கொடுக்க வேண்டும். அதற்கு இடம் தயார் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் நிதி ஒதுக்கி நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அடிப்படை வ சதிக ள் இன்றி சிரமம்
முருகேசன், தனியார் ஊழியர், காரியாபட்டி: காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைந்தது இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பேரிடர் மீட்புப் பணிகளை உடனுக்குடன் செய்து வருகின்றனர். போதிய உபகரணங்கள் இல்லாதது குறையாக இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாததால் அலுவலர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டவும், தேவையான உபகரணங்களை வழங்கவும், நிரந்தர கட்டடம் கட்ட நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.