சென்னை -- நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்: விருதுநகரில் நின்று செல்ல வேண்டும்
ஸ்ரீவில்லிபுத்தூர் : சென்னையில் இருந்து இன்று முதல் நாகர்கோவிலுக்கு இயங்கும் வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்ல வேண்டுமென விருதுநகர் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.சென்னையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தின் வழியாக செங்கோட்டை செல்ல பகல் நேர ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இயக்கப்படும் கொல்லம், சிலம்பு, பொதிகை ரயில்களில் தான் விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் பயணித்து வருகின்றனர். எனவே, சென்னை -- செங்கோட்டை வழித்தடத்தில் பகல் நேர ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென மக்கள் கோரி வந்தனர். இந்நிலையில் இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்று திரும்பும் வகையில் 16 பெட்டிகளுடன் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த ரயிலுக்கு விருதுநகரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இது விருதுநகர் மாவட்ட மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.எனவே, இந்த வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்ல எம்.பி.,க்கள் குரல் கொடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.