கவனச்சிதறல் இன்றி செயல்பட்டால் வெற்றி தான்: காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு
விருதுநகர்: தோல்விகள் வரும் போது அதற்கான காரணத்தை அறிந்து, சரிசெய்து, கவனச் சிதறல் இல்லாமல் செயல்படும் போது வெற்றி பெறலாம் என விருதுநகரில் நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசினார்.காபி வித் கலெக்டர் நுாறாவது நிகழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் உடன் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் உடைய 150 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 2022 ஜன.7ல் துவங்கப்பட்டு தற்போது நுாறாவது நிகழ்ச்சியை எட்டி உள்ளது.கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், “ஒரு சாதாரண எளிய பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், எந்த துறையின் மீது தனக்கான ஆர்வம் இருக்கிறதோ, எந்த துறையின் மீது தனக்கு விருப்பம் இருக்கிறதோ, அதை விடாமல் பற்றிக்கொண்டு அந்த வயதிற்கே உரிய கவனச் சிதறல்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, எப்படிப்பட்ட உயரங்களை தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் அடைய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் நடராஜன், என்றார்.கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியதாவது: என்ன கிடைக்கிறதோ நாம் அதை வைத்து தான் முன்னேற முடியும் என்று நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், விருப்பத்தோடும், கடின உழைப்போடும், தொடர்ச்சியான முயற்சியோடும் செயல்படும் போது அதற்குண்டான பலன் கிடைக்கும்.நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை பற்றி எதையும் யோசிக்காமல், உங்களுக்கு எது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள்.தோல்விகள் வரும் போது அதற்கான காரணத்தை அறிந்து, சரிசெய்து, கவனச் சிதறல் இல்லாமல் செயல்படும் போது வெற்றி பெறலாம். எந்த துறையாக இருந்தாலும் நம்முடைய செயலை முழு மனதோடு செய்கிற போது வெற்றி பெற முடியும், என்றார்.கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு, விளையாட்டின் மூலம் அடுத்தடுத்த நிலைக்கு உயர்வது, அதற்கான வாய்ப்புகள், பயிற்சி உள்ளிட்டவை தொடர்பான தங்களுடைய சந்தேகளுங்கு விளக்கம் அளித்தார்.