சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி
வத்திராயிருப்பு: சேதமடைந்த ரோடு, வாறுகால்; சுகாதார வளாகமின்றி அவதி, மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீர் என் பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் வ.புதுப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு மக்கள்.ஓடைத்தெரு, திரு.வி.க.தெரு, சாலியர் தெருக்களை கொண்ட இந்த வார்டில் மக்கள் சுகாதார வளாகம் இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. திரு.வி.க.தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.ஓடைத்தெரு வாறுகால் பாலம் சேதமடைந்த பல மாதங்களாக சீரமைக்க படாமல் காணப்படுகிறது. ரோடும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் பிற பகுதி மழைநீர் ஓடைத்தெரு கல்லறை பகுதியில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய குறைபாடுகளை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வார்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.