| ADDED : ஜூலை 28, 2024 04:23 AM
விருதுநகரில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வரை 67 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதை 1963 ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் வழியாக கொல்லம் -கோவை, கொல்லம்- நாகூர், கொல்லம் -சென்னை போன்ற ரயில்கள் இயங்கி வந்தது.ஆனால், 2013ல் இந்த வழித்தடம் பல கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை இந்த வழித்தடத்தில் தினமும் ரயில் சேவை என்பது நடைபெறவே இல்லை.தற்போது இயங்கும் விருதுநகர் - காரைக்குடி டெமு ரயில் கூட வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்குகிறது. ராமேஸ்வரம்- கன்னியாகுமரி ரயில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டுமே இயங்குகிறது. இதுபோல் சிலம்பு, புதுச்சேரி, வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயங்கிய கொல்லம்- -கோவை, கொல்லம் -- சென்னை ரயில்கள் தற்போது இயக்கப்படவில்லை.விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த வழித்தடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளது. இந்த 3 சட்டசபை தொகுதியிலும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட கல்வி, தொழில், வேலை வாய்ப்புக்காக இந்த வழித்தடத்தின் வழியாக பரமக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.இதில் விருதுநகரில் காலையில் கிளம்பும் காரைக்குடி ரயில் இரவு தான் மீண்டும் திரும்புகிறது. வாரத்தின் சில நாட்கள் மட்டும் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரவு நேரத்தில் தான் இயங்குகிறது. இந்த வழித்தடத்தில் பகல் நேர ரயில் எதுவும் இல்லை.இதனால் தங்கள் ஊரின் வழியாக ரயில்வே ஸ்டேஷன் இருந்தும், வழித்தடங்கள் இருந்தும் ரயில்கள் இல்லாமல் காட்சி பொருளாகவே ரயில்வே நிலையங்கள் காணப்படும் நிலை உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வீணாகி கிடக்கிறது. ரயில்வே துறைக்கும் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நிர்வாக செலவு ஏற்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட தாம்பரம் --செங்கோட்டை அந்தியோதயா ரயிலும் நிறுத்தப்பட்டது.எனவே, விருதுநகர் --மானாமதுரை அகல ரயில் வழித்தடத்தில் தினசரி பகல் நேர பாசஞ்சர் ரயில்கள் இயக்கவும், இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் தங்கள் பகுதி பிரதிநிதிகளான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.