சாத்துாரில் தெருநாய் கடி அதிகரிப்பு
சாத்துார்: சாத்துார், சுற்றுக்கிராமங்களில் தெருநாய்க்கடி அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார், ஊஞ்சம் பட்டி, அயன்சத்திரப்பட்டி பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கடித்து விடுவதால் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த ஒரு வாரத்தில் 4 வயது குழந்தை முதல் 58 வயது முதியவர் வரை 10க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடிக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில்லை. இதனால் தெரு நாய்கள் கடிக்கும் போது மக்கள் மிகுந்தபீதிக்குள்ளாகி வருகின்றனர். தெருவில் விளையாடும் குழந்தைகளும், சிறுவர்களும் நாய்க்கடி ஆளாகி வருகின்றனர்.குழந்தைகளை நாய்கள் கடிக்கும் போது பெரியவர்கள் பார்க்க தவறினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமைதியாக நடந்து வந்து திடீர் என கடிக்கும் தெருநாய்களை இனம் காண்பதும் மக்களுக்கு கடினமாக உள்ளது.நாய்களின் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடம் ஏற்படுத்திடவேண்டும்.மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் வெறி பிடித்தநாய்கள் கடிக்கின்றன. இதனால் கால்நடை வளர்ப்பவர்களும் பாதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களையும் வெறிபிடித்தநாய்களையும் அகற்றஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.