* கண்மாய் காப்போம் . . . தெற்கு நத்தம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்பாலும் 3 மடைகள் பழுதடைந்தாலும் தண்ணீர் தேங்குவதில்லை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தெற்கு நத்தம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், கண்மாயின் 3 மடைகள் பழுதடைந்தும் போனதால் தண்ணீர் தேங்குவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி அருகே தெற்குநத்தத்தில் பெரிய கண்மாய் உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. கண்மாயை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. சோளம், கம்பு, பருத்தி உட்பட பயிர்கள் விளைவிக்கப்பட்டன. நாளடைவில் கண்மாய் பராமரிப்பு இல்லாமல் போனதால், நீர்ப் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. கண்மாயின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாய நிலமாக மாறி விட்டது. கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகள் சேதமடைந்து விட்டன. கண்மாயின் 3 மடைகள் சேதமடைந்து விட்டன. ஷட்டர்களும் பழுதடைந்து விட்டன. மழை காலங்களில் தண்ணீர் தேங்கிற போது, உபரி நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் வந்து விடுகிறது. மடைகளையும், ஷட்டர்களையும் பழுது நீக்காமல் விட்டால் ஒட்டு மொத்த தண்ணீரும் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. ஒரு மடையை சரி செய்து ஷட்டர்களை சீரமைத்தால், அவசரத்திற்கு தண்ணீரை வெளியேற்றி விடலாம். விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைக்கும் ஊராட்சியும் பொதுப்பணித்துறையும் கண்டு கொள்ளவில்லை. மடைகள் பழுது நீக்குதல் அவசியம்
அலெக்சாண்டர், விவசாயி: தெற்கு நத்தம் பெரிய கண்மாயின் 3 மடைகளும் சேதமடைந்து விட்டன. கண்மாய் நிறைந்தால் தண்ணீர் வெளியேற வழி இல்லை. இதனால் தண்ணீர் ஊருக்குள் வந்து விடும் அபாயம் உள்ளது. போர்க்கால அடிப்படையில் மழைக்காலத்திற்குள் மடைகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் வெள்ளம் ஊருக்குள் வந்து வெள்ளக்காடாக மாறிவிடும். பராமரிப்பு இல்லை
நடராஜன், விவசாயி: தெற்கு நத்தம் பெரிய கண்மாய் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கண்மாயின் கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும் சீமை கருவேல மரம் அகற்ற வேண்டும். கண்மாயின் மழை நீர்வரத்து ஓடைகளை சரி செய்ய வேண்டும். கண் மாயில் உள்ள 3 மடைகளை சரி செய்து முறையாக தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மழை பெய்தால் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது. குடிநீர் ஆதாரம்
முருகன், விவசாயி: தெற்குநத்தம் பெரிய கண்மாய் ஒரு காலத்தில் ஊரின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. சுற்றியுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் கிடைத்தது. கண்மாய் பராமரிப்பு இல்லாமல் போனால், கண்மாயில் தண்ணீர் தேங்குவது இல்லை. தேங்கிய தண்ணீரும் பழுதடைந்த மடையால் வெளியேறி விடுகிறது. எங்கள் கிராம மக்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலையில் உள்ளனர்.