| ADDED : ஜூன் 10, 2024 05:50 AM
நரிக்குடி, : மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி அருகில் சுகாதாரமற்ற முறையில், செயற்கை நிறமூட்டிய பண்டங்கள் விற்பதை கண்காணித்து தடுக்க சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறையினர் முன்வர வேண்டும்.மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர் ஆர்வத்துடன் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவர். 2 மாத கோடை விடுமுறையில் விளையாடிய பழக்கங்கள் மாறாமல் விளையாட்டு மனநிலையில் மாணவர்கள் இருப்பர். வீட்டில் ஆசைப்படும் போது தேவையான உணவுகள், தின்பண்டங்கள் சாப்பிட கிடைத்திருக்கும். அதுபோன்ற மனநிலையிலிருந்து மாற சில நாட்கள் ஆகும்.பள்ளி அருகில் திறந்த வெளியில் சுகாதாரமற்ற, செயற்கை நிறமூட்டிய முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி உண்ண மனசு அலைபாயும். மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதுவரை பள்ளியின் முன்பு அல்லது அருகில் திறந்த வெளி கடைகள் இல்லாது இருந்திருக்கும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் திறந்தவெளி கடைகளும் ஏராளமாக முளைக்க துவங்கும். கடை வைப்பதால் எந்த பிரச்னையும் இல்லை.அங்கு விற்கப்படும் தரமற்ற பொருள்களினால் தான் பிரச்னை ஏற்படுகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, காலாவதியாகும் தேதி என எதுவுமே இல்லாத உணவு பொருட்கள் விற்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. நிறமூட்டப்பட்ட மிட்டாய்கள், ஜெல்லிகள், ஜூஸ்கள் விற்கின்றனர். மாணவர்கள் இதைக் கண்டதும் விரும்பி சாப்பிட முற்படுகின்றனர்.இதன் மூலம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதிக அளவு சாயம் கலந்த மிட்டாய்களை வாங்கி உண்ணும் மாணவர்களுக்கு வயிற்று போக்கு, அஜீரண கோளாறு ஏற்படுகிறது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பள்ளி அருகில் திறந்த வெளியில் விரிக்கப்படும் கடைகளை கண்காணித்து சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.