ரோடு மேலே ரோடு போட்ட பின் பாலத்தில் தாழ்வாகிவிட்ட தடுப்பு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள
விருதுநகர்: விருதுநகர் அருப்புக்கோட்டை பாலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ரோடு மேலே ரோடு போட்டதால் பாலத்தின் தடுப்புகள் தாழ்வாகி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.ரோடு மேலே ரோடு போடும் கலாசாரம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த புதிதில் ரோடு மேலே ரோடு போட கூடாது. அடியில் தாரை பெயர்த்து விட்டு தான் போட வேண்டும் என அப்போதைய தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை அந்த உத்தரவை எந்த உள்ளாட்சி அமைப்பும் பின்பற்றவில்லை. இதனால் ரோடு மேலே ரோடு போடுவதால் குடியிருப்புகள் தாழ்ந்து விட்டன. இன்னொரு பக்கம் பாலத்தின் தடுப்புகளும் தாழ்வாகி விட்டன. விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை பாலம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு ஆகிவிட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரோடு போடப்பட்டது. இப்பாலத்தில் கடைசியாக 2021ல் ரோடு போடப்பட்டது. எதையும் தோண்டாமல் அப்படியே ரோடு போடப்பட்டதால் பாலத்தின் தடுப்புகள் தாழ்வாகி விட்டது. 2022 அக். 8ல் டூவீலரில் சென்றவர்கள் தடுப்பு மீது தவறி கீழே விழுந்து இறந்தனர். அதற்கு பின்னும் அவ்வப்போது விபத்துக்கள் நடந்தன. சமீபத்தில் கூட விபத்து நடந்து வாலிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் வளைவுகள் நிறைந்த பாலமாக இருப்பதாலும், தடுப்பு உயரம் குறைவாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த பாலத்தின் தடுப்புகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமமூர்த்தி ரோட்டில் உள்ள பாலத்தில் இது போல தடுப்பு உயரம் குறைவாக தான் இருந்தது. 2022ல் ஆட்டோ ஒன்று மோதி விபத்தை சந்தித்த சி.சி.டி.வி., காட்சிகள் வீடியோ வைரலானதை அடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆபத்தை உணர்ந்து உயரமான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் இந்த பாலத்திலும் அமைத்தால் விபத்து அச்சம் குறைய வாய்ப்புள்ளது.