விருதுநகர் நான்கு வழிச்சாலை, சர்வீஸ் ரோட்டில் ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்பால் அல்லல் பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்
விருதுநகர் : விருதுநகர் லட்சுமி நகர் அருகே செல்லும் நான்கு வழிச்சாலை, சர்வீஸ் ரோட்டில் இரவு நேரத்தில் ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமலும், ரோட்டை கடப்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலையில் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் பகுதிகள் உள்ளது. ஊராட்சி பகுதியாக இருந்தாலும் நகருக்கு அருகே இருப்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது.திருநெல்வேலி, கோவில்பட்டி, சிவகாசி, ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் வழியாக சென்னை, கோவை, பெங்களூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் தினமும் இரவு நேரத்தில் லட்சுமி நகர் அருகே செல்லும் நான்கு வழிச்சாலை, சர்வீஸ் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.இதனால் பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் முன்னேறி செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல நிற்பதால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டில் லட்சுமி நகரின் பிரதான ரோட்டை ஆக்கிரமித்து ஆம்னி பஸ்கள் நிற்கின்றன. இதனால் சக வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆம்னி பஸ்கள் விருதுநகர் பயணிகளை ஏற்றிச் சென்றால் நான்கு வழிச்சாலை, சர்வீஸ் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் தவிர்க்கப்படும். மேலும் இரவு நேரத்தில் அதிக பயணிகள் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் போது பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் செல்லும் பைபாஸ் ரைடர் பஸ்களும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான கட்டாயம் வரும்.எனவே மாவட்ட நிர்வாகம் நான்கு வழிச்சாலை, சர்வீஸ் ரோட்டில் இரவு நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றும் ஆம்னி பஸ்கள், இனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து விருதுநகர் பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.