குடிநீர், வாறுகால் இல்லை, சேதமான ரோடு
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே நேரு நகரில் குடிநீர், வாறுகால், ரோடு வசதிகளின்றி மக்கள் ஆண்டு கணக்கில் அல்லல் படுகின்றனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ளது. நேரு நகர். இங்குள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளான தலைவர் மாரிச் செல்வம், உபதலைவர் பாண்டியராஜ், பொருளாளர் அருணாச்சலம், இணை செயலர் கஸ்தூரி, உறுப்பினர்கள் தமிழரசி, சங்க சுப்பு கூறியதாவது:நேரு நகர் உருவாக 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தும், நகரின் முக்கிய பகுதியில் இருந்தும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. அருப்புக்கோட்டை நகர் முழுவதும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் தாமிரபரணி குடிநீர் வைகை குடிநீர் வருகிறது.ஆனால் எங்கள் நேரு நகருக்கு மட்டும் நகராட்சி மூலம் எந்த வித குடிநீரும் வழங்கப்படவில்லை. பலமுறை நாங்கள் மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குடிநீரை நாங்கள் தனியார் இடத்தில் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.இங்குள்ள தெருக்களில் வாறுகால்கள் மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. மெயின் ரோட்டில் உள்ள ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யட்டும் பராமரிப்பு இன்றி உள்ளதால் கழிவுநீர் தேங்கி தெருக்கள் உள்ள வாறுகால் வழியாக வந்து விடுகிறது. மதுரை செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஓடைகள் முற்றிலும் அடைபட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடைகளை பராமரிக்க வேண்டும்.எங்கள் பகுதியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் பொது கழிப்பறை கட்டி பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து விட்டது. எங்களுக்கு சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். அதற்குத் தேவையான இடம் உள்ளது. நவீன சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும்.தெருக்களில் ரோடுகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. புதியதாக பேவர் பிளாக் கல் பதிக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் இதில் தண்ணீர் வரவில்லை.போடப்பட்ட குழாய்களும் சேதம் அடைந்து விட்டது. வாறுகால்களை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்ய வருவது இல்லை. எங்கள் பகுதியில் உள்ள பொது பயன்பாட்டிற்கு உள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து தர வேண்டும்.