உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அல்லல்படும் ராமலிங்கா ஆர்ச் குடியிருப்போர்

அல்லல்படும் ராமலிங்கா ஆர்ச் குடியிருப்போர்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே புறநகர் பகுதியான ராமலிங்கா ஆர்ச் குடியிருப்பு பகுதியில் மெயின் ரோடு வாகனங்கள் செல்ல முடியாமல் பள்ளமாகவும், மழைக்காலமானால் வெள்ளம் தேங்கி தனி தீவாகவும் மாறி விடுகிறது.அருப்புக்கோட்டை புறநகர் பகுதி ராமலிங்கா ஆர்ச். இங்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மதுரை ரோட்டில் இருந்து ஆர்ச்சிற்குள் செல்ல மெயின் ரோடு உள்ளது.இதன் வழியாகத்தான் சிலோன் காலனி, தீர்த்தகரை, போஸ்டல் காலனி உட்பட பகுதிகளுக்கு செல்ல முடியும். தினமும் 50 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், மினி பஸ்கள், கனரக வாகனங்கள், டூ வீலர்கள் என, இந்த ரோடு போக்குவரத்து அதிகமாக இருக்கும். முக்கியமான இந்த ரோட்டின் பல பகுதிகள் பள்ளமாகவே உள்ளது. இதில் தான் வாகனங்கள் சிரமப்பட்டு செல்கிறது. மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதியே தனி தீவாக மாறி விடுகிறது. மக்களால் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. தெருக்களில் பல பகுதிகளில் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. ராமலிங்க ஆர்ச் கிழ மேல் வீதியில் 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட வாறுகாலில் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. புதிய வாறுகால் அமைத்தும் பயன் இல்லை. மெயின் ரோட்டில் குப்பை குவியலாக கொட்டப்பட்டுள்ளது. அவற்றை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் வருவதில்லை.ராமலிங்க ஆர்ச், சிலோன் காலனி, புளியம்பட்டி, தீர்த்தகரை உட்பட பகுதிகளுக்கு குடிநீர் வசதி இல்லை.மற்ற பகுதிகளுக்கு வரும் தாமிரபரணி குடிநீர் இந்த பகுதிகளுக்கு வருவது இல்லை. 15 ஆண்டுகளாக தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற இந்த பகுதி மக்கள் அனைவரும் டெபாசிட் பணம் கட்டி பல மாதங்களாக காத்திருக்கின்றனர். ஊராட்சியில் இருந்து குழாய்கள் பதிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பல தெருக்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருட்டாக உள்ளது. இருட்டில் அடுத்த தெருவிற்கு செல்வதற்கு கூட பயமாக இருப்பதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.

பள்ளமான ரோடு

பூமதி, குடும்பதலைவி : ராமலிங்கா ஆர்ச் மெயின் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட வெள்ளம் சூழ்ந்து ரோட்டில் நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. டூவீலர்கள் செல்ல முடிவதில்லை. பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.

குடிநீர் இல்லை

பூங்கொடி, குடும்பதலைவி: ராமலிங்கா ஆர்ச், சிலோன் காலனி, நெசவாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் ஊராட்சி மூலம் குடிநீர் வசதி இல்லை. மற்ற பகுதிகளுக்கு வரும் தாமிரபரணி குடிநீர் எங்கள் பகுதிகளுக்கு மட்டும் வருவது இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற டெபாசிட் பணம் கட்டி பல மாதங்களாக காத்திருக்கிறோம். பல ஆண்டுகளாக குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.

வாறுகால் சேதம்

ராஜ நவீன், வியாபாரம்: எங்கள் பகுதியில் பல தெருக்களில் வாறுகால் இல்லாமல் உள்ளது. இருக்கின்ற வாறு காலும் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி கொசு தொல்லை தாங்க முடியவில்லை.ரோட்டின் பல பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. எங்கள் பகுதி மெயின் ரோட்டின் இரு புறமும் வாறுகால் அமைத்தும் ரோடும் புதியதாக போட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை