குடிநீருக்காக மக்ககள்திண்டாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீருக்காக அந்தந்த பகுதி குடிநீர் ஆதாரங்களை வைத்து சமாளித்து வந்த நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நகராட்சி பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களுக்கும் இந்தக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒரு சில நகராட்சிகளில் தாமிரபரணி குடிநீர் திட்டம் 1, 2 என அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட வருகிறது.தாமிரபரணி ஆற்றில் இருந்து நூற்றுக் கணக்கான கி.மீ., கடந்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. இவற்றை அந்தந்த ஊர்களில் உள்ள சம்புகள், மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடக்கிறது. கிராமங்களுக்கு வாரத்தில் 2 நாட்களும் நகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.ஆனால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு, பராமரிப்பு, மின்தடை, ஆற்றில் வெள்ளம் உள்ளிட்ட காரணங்களினால் குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடிவது இல்லை. இதனால் மாதத்திற்கு 3 நாட்கள் தான் தண்ணீர் விநியோகம் பல ஊர்களில் நடைபெறுகிறது. தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளை கவனிக்க பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லை. கிராமப் பகுதிகளில் குழாய் உடைந்தாலும் அவற்றை தேடி கண்டுபிடித்து சரி செய்ய பல நாட்கள் ஆகி விடுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.அருப்புக்கோட்டை நகராட்சியில் வைகை, தாமிரபரணி குடிநீர் 1, 2 என மூன்று திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இரண்டாவது திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் தான் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கும் இந்த திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவு விநியோகம் செய்வது குறைந்து போனதாலும் குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை.மழைக்காலங்களில் ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மின்மோட்டார்கள் அதிக வெள்ளத்தால் மூழ்கி விடுகின்றன. ஆற்றில் நீர் வரத்து குறைந்தால் தான் இவற்றை சரி செய்ய முடியும். இதனால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. கோடை காலத்தில் ஆறு வறண்டு போய் விடுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் எடுக்கும் அளவும் குறைந்து விடுகிறது. இதனாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க முடிவதில்லை.வெளியூர் குடிநீர் திட்டத்தை மட்டும் நம்பி இருக்காமல், உள்ளூர்களில் இருக்கும் கண்மாய்கள், ஊருணிகள், தெப்ப குளங்கள் ஆகியவற்றை முறையாக பராமரித்து அவற்றில் மழை நீர் சேகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் பஞ்சம் தீரும். ஒரு காலத்தில் இவற்றின் மூலம் தான் அந்தந்த ஊர்களின் குடிநீர் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டதால் அவை வறண்டு கிடக்கின்றன. வரும் கோடை காலத்தை கணக்கில் கொண்டு அரசு நீர் நிலைகளை மேம்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும்.