உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / * பிரச்சனையும், தீர்வும்

* பிரச்சனையும், தீர்வும்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் உள்ள ரோடுகள், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்கும், போக்குவரத்திற்கும், இடைஞ்சலாக உள்ளது. அருப்புக்கோட்டையில் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், மெத்தனத்தாலும் ஆக்கிரமிப்புகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, விருதுநகர் ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, தெற்கு தெரு, பழைய புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவற்றின் வழியாக வந்து செல்லும். காலை மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனைத்து பஸ்களும் கனரக வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதாலும், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதாலும் ரோட்டில் மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. பிரச்னை நகரில் உள்ள ரோடுகள் அனைத்தும் குறுகலாக உள்ளது. ரோட்டின் இருபுறமும் கடைகளின் சன் ஷேடுகளை நீட்டித்தும் கடைகளை ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்தும் உள்ளனர். இது தவிர நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பால் ரோடு ஓர நடைபாதைகளில் மக்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அண்ணாத்துரை சிலை பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது. 15 ஆண்டுகளாக நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல், நகராட்சி, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, போலீஸ் இணைந்து கடமைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தலைவிரித்து ஆடுகிறது. ஒருவழிப் பாதையாக இருக்கும் தெற்கு தெருவில் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகிறது. காந்திநகர் பகுதியில் ரோடு அகலமாக இருந்தும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்வதில்லை. நகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் மெத்தனமாக இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் துணிந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதிகாரிகள் அலட்சியம் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர்: அருப்புக்கோட்டை நகரில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. ரோடு மோசமான நிலையில் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ரோட்டிலும் நடக்க முடியவில்லை. மக்கள் நடைபாதையை பயன்படுத்தவும் முடியவில்லை. ஆக்கிரமிப்பில் நகர் சிக்கி தவிக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பாளர்கள் சுதந்திரமாக ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அகற்றுதல் அவசியம் மாரிச்செல்வம், சமூக ஆர்வலர்: நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை, திருச்சுழி ரோடு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் டூவீலர்களில் கூட கடக்க முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் இருக்கின்ற ரோட்டை அகலப்படுத்தி அமைத்தால் தான் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை