சிரமத்தில் ராமாபுரம், மணிநகர் மக்கள்
அருப்புக்கோட்டை: தோண்டப்பட்ட ரோடுகள், வாறுகால் இல்லாததால் வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர், நாய்கள் தொல்லை உட்பட பல்வேறு சிரமங்களுடன் அருப்புக்கோட்டை ராமாபுரம், மணிநகர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான ராமாபுரம், மணி நகர்கள் உருவாகி 20 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் இல்லை. மெயின் ரோட்டிலிருந்து புறநகர் பகுதிக்கு வரும் ரோடு கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ரோடு சேதமடைந்துள்ளது. இந்த நகர்களில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பதற்காக ரோட்டை தோண்டி பணிகள் முடிந்த பின் ரோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.இதனால் இந்த ரோட்டில் வாகனங்களில் செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பணி முடிந்து ஓராண்டாகியும் ரோடு இந்த நிலையில் தான் உள்ளது. தெருக்களில் வாறுகால்கள் அமைக்காததால் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவிலும் காலி பிளாட்டுகளிலும் தேங்கி நிற்கிறது. தெருக்களுக்கு வாறுகால், ரோடு அமைக்க ஊராட்சியில் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உட் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் இரவு நேரங்களில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து புறநகர்களுக்கு செல்லும் நுழைவு பகுதிகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. மெயின் வாறுகாலை அமைக்கும் பணிக்காக தோண்டி விட்டு பாதையை சீரமைக்காமல் விட்டு விட்டனர். வாறுகால் வேண்டும்
வாசுகி, குடும்பதலைவி: மணி நகர் பகுதியில் குடி வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மற்ற புறநகர் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் பகுதியை ஊராட்சி நிர்வாகம் புறக்கணிப்பு செய்கிறது. பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அய்யனார் கோயில் அருகில் கழிவுநீர் தேங்கி, கழிவுநீர் குட்டையாக மாறி சுகாதார கேடாக உள்ளது. ரோடு இல்லை
மனோன்மணி, குடும்பதலைவி: நகரில் வளர்ச்சி பணிகள் எதுவும் இல்லை. ரோடு இல்லாமல் சிரமப்படுகிறோம். இருக்கின்ற ரோட்டை ஜல் ஜீவன் குழாய் பதிக்க தோண்டி, பணி முடிந்த பின் சரி செய்யாமல் விட்டு விட்டனர். புறநகர் பகுதிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும். வளர்ச்சி பணிகள் இல்லை
சுந்தரபாண்டியன், ஓய்வு அரசு அலுவலர்: புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவது இல்லை.எங்கள் பகுதியான ராமாபுரம், மணிநகர் பகுதிகளில் ரோடு, வாறுகால், தெரு விளக்கு அமைக்க கோரி பல முறை மனு கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை.