உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

விருதுநகர்,:விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுர கனிமவளக் கொள்ளை விவகாரத்தில், சிறப்பு டி.ஆர்.ஓ.,வின் விசாரணை அறிக்கை, கலெக்டர் ஜெயசீலனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் 500 கியூபிக் மீட்டர் வண்டல் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், 5000 கியூபிக் மீட்டர் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சாத்துார் தாசில்தார் ராமநாதன் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு விடுவிக்கப்பட்டார். இதேபோல் நீர்வளத்துறை உதவி பொறியாளர் அனிதாவின் சஸ்பெண்ட் மீதான கலெக்டரின் பரிந்துரையில் மதுரை தலைமை பொறியாளர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் வருவாய்த்துறையினர் 5 பேர் மட்டுமே சஸ்பெண்ட் ஆனதாக தெரிகிறது.இந்த விவகாரத்திற்கு சிறப்பு விசாரணை அதிகாரியாக பிப்.,16ல் நில எடுப்பு டி.ஆர்.ஓ., ஆனந்தி நியமிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 வருவாய்த்துறையினர், பரிந்துரைக்கப்பட்ட வேளாண், நீர்வளத்துறையை சேர்ந்த இருவர் ஆகிய 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.இவர்களை தவிர்த்து பறிமுதல் செய்த 12 லாரிகளில் 4 மட்டுமே ஸ்டேஷன் வளாகத்தில் இருந்ததற்கும், தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பின் லாரிகள் மீண்டும் வந்ததற்கும் பின்னணியில் போலீசாருக்கும், கனிமவள கொள்ளையர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா, எப்.ஐ.ஆர்., எண் 45ஐ பதிவிட்டு வழக்கு பதியப்படாத 12 பேர் முன் ஜாமின் பெற்றுள்ளனர், அவர்களிடமும் விசாரணை நடந்துள்ளதா என தெரியவில்லை.இது குறித்து விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., ஆனந்தியிடம் கேட்ட போது, கலெக்டர் ஜெயசீலனிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எஸ்.பி., கண்ணன் தற்போது வரை போலீசார் மீதான புகார் குறித்து விசாரிக்க குழு ஏதும் அமைக்கவில்லை. டைரி பக்கங்களில் போலீசார் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், எந்த தெளிவான விசாரணையும் நடக்கவில்லை.அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் விரைவில் அடுத்தகட்ட நிலை தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை