உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆலைகள் முன் சாம்பிள் பட்டாசுகளை சோதிப்பதால் விபத்து அபாயம்

ஆலைகள் முன் சாம்பிள் பட்டாசுகளை சோதிப்பதால் விபத்து அபாயம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாம்பிள் பட்டாசுகளை ஆலைகள் அருகே வெடித்து சோதிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.மாவட்டத்தில் 1080 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதில் நாக்பூர், சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் 775, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற ஆலைகள் 305 உள்ளன. கடந்த ஆண்டு சிவகாசி ரெங்கபாளையம் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் அருகிலேயே அனுமதி பெறாமல் கடை அமைத்து விற்பனை செய்து வந்தனர். நுகர்வோரிடம் வெடித்து காட்டவும் செய்தனர். இதில் தீ பொறி சிதறி கடையில் இருந்த பட்டாசில் பட்டு வெடி விபத்தாக மாறியது. அப்போது அருகே கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து கொண்டிருந்த 12 பெண்கள் உட்பட 14 பேர் பலியாகினர்.இந்த விபத்துக்கு பிறகு ஆலைகளுடன் கடைகளுக்கு உரிமம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்ட கடைகள் முறைப்படி தேவையான விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் அரசியல் பின்புலம் கொண்ட சிலரது பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளின் தரம், வெடிக்கும் திறனை காட்ட ஆலைகளின் வெளியே வைத்து வெடிக்க செய்கின்றனர். அதை வீடியோ எடுத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்புகின்றனர்.இதை பார்த்து பிற ஆலை உரிமையாளர்களும் செய்தால் நிச்சயம் பாதிப்பு தான் ஏற்படும். பொதுவாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை ஆலையில் இருந்து வெகு தொலைவில் உள்ள காலி மைதானத்தில் வைத்து போர்மேன், மேற்பார்வையாளர் முன்னிலையில் சோதித்து பார்ப்பர். தற்போது ஆலை முன் சோதிப்பதும், விளம்பர நோக்கத்திற்காக ஆலையின் பெயரை காட்டும் வகையில் வீடியோ எடுப்பதும் தவறான முன்னுதாரணமாகி வருவதுடன், விபத்துக்கும் வழி செய்கிறது.எனவே ஆலை முன் பட்டாசு வெடித்து சோதிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை