சாலைப்பணியாளர்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் கடிதம்
விருதுநகர்: 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு நிறைவேற்றக் கோரி எம்.எல்.ஏ.,க்களிடம் சாலை பராமரிப்பு ஊழியர்கள் அன்ஸ்கில்டு சங்கத்தினர் கடிதம் கொடுக்க துவங்கியுள்ளதாக மாநில தலைவர் வைரவன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: சாலை பராமரிப்பு ஊழியர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை கருத்தியலான ஊதியம், ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2024 அக். 23ல் தீர்ப்பளித்தது.இதனை நிறைவேற்ற வேண்டும் என 2024 டிச. 19ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தபோது நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தமிழக பட்ஜெட் மார்ச் 14ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆளும்கட்சி, எதிர்கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சாலை பராமரிப்பு ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களை ஊழியர்கள் சந்தித்து கடிதம் கொடுக்க துவங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக அமைச்சர்கள், எம்.பி.,க்களை சந்தித்து கடிதம் கொடுக்கப்படவுள்ளது என்றார்.