விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல்
விருதுநகர : விதை விற்பனையாளர்கள் அரசிடம் விதை விற்பனை உரிமம் பெற்று விதைகளை விற்பனை செய்ய வேண்டும் ,என விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார்.விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் கோயம்புத்துார் விதை ஆய்வு துணை இயக்குனர் குழுவுடன் இணைந்து தனியார், அரசு விதை விற்பனை நிலையங்களில் சிறப்பு குழு ஆய்வு செய்ததில் காலாவதியான பதிவுறுச்சான்று கொண்ட விதைகள், முளைப்புத்திறன் சான்றிதழ் பெறாத காய்கறி விதைகள் கண்டறியப்பட்டது. இவற்றிற்கு விற்பனை தடை விதிக்கப்பட்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் விதை விற்பனையாளர்கள் அரசிடம் விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை செய்யவும், நிலையங்களில் பெயர் பலகை, விதை இருப்பு விவரம், காட்சிபடுத்துதல், விற்பனை பட்டியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.விநியோகிக்கும் போது விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். அதில் விதைகளின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு விவசாயிகளின் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல் விதை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார்.