சிவகாசி ரிங் ரோடு முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு; 10.4 கி.மீ., பணி விரைவில் துவக்கம்
சிவகாசி : சிவகாசி ரிங் ரோடு அமைப்பதற்கான முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 10.4கி.மீ.,க்கு சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய இந்நகரத்தில் தற்போதைய பெரும் அச்சுறுத்தல் போக்குவரத்து நெருக்கடி தான்.மெயின் ரோடுகள் அனைத்தும் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் காணப்படுகின்றன. இந்நிலையில் 2012 முதல் சிவகாசியில் ரிங் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022 முதல் தீவிர நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. ரிங் ரோடு சிவகாசியை சுற்றி 34 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது.கீழத்திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூர், ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான் என 10 கிராமங்கள் வழியாக செல்கிறது. இதற்கான நில எடுப்பு பணிகள் 2 ஆண்டுகளாக துரிதப்படுத்தபட்டு முடிவடைய உள்ளது.இந்நிலையில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை 10.4 கி.மீ.,க்கு முதற்கட்ட நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. மொத்தம் மூன்று கட்டமாக புதிதாக சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடக்க உள்ள நிலையில் முதற்கட்ட நில எடுப்பு சாதகமாகி உள்ளதால் மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் விரைவில் 10.4 கி.மீ.,க்கு சுற்றுச்சாலை அமைக்க உள்ளது. கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் ரயில் தண்டவாளம் செல்வதால் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி, விருதுநகர் -- சிவகாசி, கழுகுமலை -- சிவகாசி-, சாத்துார், சிவகாசி -- ஆலங்குளம், சிவகாசி -- எரிச்சநத்தம், சிவகாசி - -கன்னிசேரி, விஸ்வநத்தம் -வெங்கிடாசலபுரம் உள்ளிட்ட ரோடுகள் சுற்றாக இணைக்கப்படும். இந்த சிவகாசி வெளி சுற்று வட்ட பணியில் முதற்கட்ட பணி மட்டும் நடந்தால் எரிச்சநத்தம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசிக்கு எளிதில் சென்று வர முடியும். இந்நிலையில் விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி சிவகாசி சுற்று வட்ட சாலை அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். சிவகாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் காளிதாசன், உதவிப் பொறியாளர் விக்னேஷ், நெடுஞ்சாலைத் துறையினர் உடன் இருந்தனர். கோட்ட பொறியாளர் கூறுகையில், முதற்கட்ட ரிங் ரோடு முடிவடைந்த பின்னர் விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்வதற்கு சிவகாசி நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக சென்றடைய முடியும். இத்திட்டம் முழுமையாக முடிந்தால் கழுகுமலை, சாத்துார் செல்வதற்கும் எளிதாக இருக்கும். சிவகாசி நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இன்னும் சிவகாசி நகரின் வளர்ச்சி விரிவடையும் வாய்ப்புள்ளது, என்றார்.