ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், ஸ்ரீவில்லிபுத்துார் மாயத்தேவன் பட்டியில், ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை வைத்துள்ளார். இதை சிவகாசி ஹவுசிங் போர்டைச் சேர்ந்த கண்ணன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.நேற்று காலை 9:35 மணிக்கு வேனில் இருந்து ரசாயன பொருட்களை தொழிலாளர்கள் மருந்து இருப்பு அறையில் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு, மருந்துகள் இருப்பு அறை வெடித்துச் சிதறியது. இதில் குன்னுாரைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன், 35, உடல் சிதறி 100 அடி துாரத்தில் துண்டு, துண்டாக இறந்து கிடந்தார். நாகபாளையத்தைச் சேர்ந்த புள்ளகுட்டி, 55, உடல் கருகி பலியானார். நதிக்குடி போஸ், 35, வடபட்டி மணிகண்டன், 31, படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தை சிவகாசி சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இங்கு, சப் - கான்ட்ராக்ட் எடுத்து, பட்டாசு தயாரித்து வந்த பாலமுருகன் என்பவரிடம் மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிக உயிர் சேதம் தவிர்ப்பு
பட்டாசு ஆலையின் மருந்துகள் தயாரிப்பு அறை சுவர்கள் வெடித்து, ஆலையின் தெற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் சிதறி விழுந்தன. அதேநேரம், ஆலையின் உட்புறத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை பகுதிகளில் விழுந்திருந்தால், அங்கு பணியாற்றிய பலரும் பலியாகியிருப்பர்.அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவால் பெரும்பாலான தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால், அதிக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.