| ADDED : மே 11, 2024 11:04 PM
காரியாபட்டி:அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் மதுரை அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் தெருவோர காய்கறி கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணியர் நிழற்குடையில் உடைந்த இருக்கைகள், போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆபத்தான வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து அச்சம் என காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டி பேரூராட்சி யில் நாளுக்கு நாள் தெருவோர காய்கறி கடைகள் அதிகரித்து வருகின்றன. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் மதுரை அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் காய்கறி கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். மற்ற வாகனங்கள் விலகிச் செல்ல முற்படும்போதும், தட்டு தடுமாறி செல்லும் வாகனங்களால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்க படாத பாடுபடுகின்றனர். அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் உடைந்து உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். உடைந்த கம்பிகளால் பயணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புஉள்ளது. போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. எதிரே ஒரு வாகனங்கள் தெரியாததால் விபத்து அச்சம் உள்ளது. ஒன்றிய அலுவலக ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி இடையூறு செய்வதால் அதிகாரிகளின் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு
ஆறுமுகம், தனியார் ஊழியர்: ரோட்டோரத்தில்காய்கறி கடைகளை வைத்து ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல லட்சங்கள் செலவு செய்து ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ரோடுகளை ஆக்கிரமிப்பது தொடர் கதையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. திருமலை, தனியார் ஊழியர்: அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடையில் தூசிகள் படிந்து, அசுத்தமாக, இருக்கைகள் உடைந்து கம்பிகள் குத்தி காயப்படுத்தும் நிலையில் உள்ளன. பயணிகள் காயம் அடைவதற்கு முன் அவற்றை அப்புறப்படுத்தி புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்னல் வேண்டும்
ஆர்.ஆறுமுகம், தனியார் ஊழியர்: போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அங்கு சிக்னல்அமைக்க வேண்டும். ஒன்றிய அலுவலக ரோட்டில் கடைக்காரர்கள்,டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளனர். ஒன்றிய அலுவலக அதிகாரிகளின் வாகனங்கள் சென்று வர பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.