உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவுசிகா ஆற்றில் கலக்கப்படும் பாதாளசாக்கடை கழிவுநீர் தோல்வி திட்டத்தில் மாசு தான் மிச்சம்

கவுசிகா ஆற்றில் கலக்கப்படும் பாதாளசாக்கடை கழிவுநீர் தோல்வி திட்டத்தில் மாசு தான் மிச்சம்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் கவுசிகா ஆற்றில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலக்கப்படுகிறது. இந்த தோல்வி திட்டத்தால் மாசு மட்டுமே மிச்சம் என மக்கள் புலம்புகின்றனர்.விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் கிழக்கு, மேற்கு பாண்டியன் காலனிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வாறுகால், வடிகால்களில் கழிவுநீரே ஓடாது என்றனர். இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் திருட்டு இணைப்புகள் வழங்கப்பட்டதால் மேன்ஹோல் நிரம்பி அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வந்தது. இந்நிலையில் சமீப காலமாக பாதாளசாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே மேன்ஹோல் லீக் ஆவது அதிகரித்து வருகிறது. இதை சரி செய்யும் நகராட்சியின் பொறியியல் பிரிவோ காலிக் கூடாரமாக உள்ளது. தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், புத்தக கண்காட்சி நடக்கும் நேரத்தில் மதுரை ரோட்டிலும், திருவிழா நேரங்களில் கச்சேரி ரோட்டிலும், முகூர்த்த நாட்களில் ராமமூர்த்தி ரோட்டில் மேன்ஹோல் லீக் ஆவது வாடிக்கையாக உள்ளது.இவ்வாறு தோல்வி அடைந்த இத்திட்டத்தால் நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. குறிப்பாக நகரின் வழியாக செல்லும் கவுசிகா நதியில் அதிகளவில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. பாதாளசாக்கடை குழாய் நேரடியாக கலக்கவும் செய்கிறது. கவுசிகா ஆற்றில் கலக்கப்படும் பாதாளசாக்கடை கழிவுநீரால் பாதிப்பு தான் ஏற்படுகிறது. இதனால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை கழிவுநீர் கவுசிகா ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை