பயன்பாட்டிற்கு வராத சுகாதாரவளாகம், தேங்கும் கழிவுநீர்
காரியாபட்டி: கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகத்தால் அரசு நிதி வீணாவது, வாறுகால் இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சிமக்கள் சிரமத்தில் உள்ளனர்.சூரம்பட்டியில் 7 ஆண்டுகளுக்கு முன் ரூ. பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு கொண்டுவராததால் புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. அதனைச் சுற்றி திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுகாதாரத் கேடுக்கு வழி வகுக்கிறது. பன்றிகள், விஷப்பூச்சிகள் அடைந்து வருகின்றன. விரிவாக்க பகுதியான திருப்பதி நகரில் வாறுகால் வசதி கிடையாது.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. போதிய குடிநீர் வசதி இல்லை. 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
பாக்கியராஜ், தனியார் ஊழியர்: சூரம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீணாகி வருகிறது. அதனைச் சுற்றி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. புதர்களை அப்புறப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டடம் வேண்டும்
நடராஜன், விவசாயி: போதிய குடிநீர் வசதி கிடையாது. 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாமல் உள்ளது. இதனால் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாறுகால் வசதி வேண்டும்
சென்னகேசவபெருமாள், தனியார் ஊழியர்: திருப்பதி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. விரிவாக்க பகுதியாகவும் இருந்து வருகிறது. வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் தேங்குகிறது. சுகாதாரக் கேடுக்கு வழி வகுக்கிறது தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.