உள்ளூர் செய்திகள்

வார்டு விசிட்

ஸ்ரீவில்லிபுத்தூர் : செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடை, பழமையான நிலையில் சுகாதார வளாகம், வாறுகாலில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு, குண்டும், குழியுமான மெயின் ரோடு, போக்குவரத்து நெருக்கடி என பல்வேறு குறைபாடுகளால் மம்சாபுரம் பேரூராட்சி 18 வது வார்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மம்சாபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் ரோட்டின் கீழ்புறம் அமைந்துள்ள இந்த வார்டில் விவேகானந்தர் தெரு, இந்திராநகர், விஸ்வா நகர் என பல்வேறு குறுகிய தெருக்கள் உள்ளன. மெயின் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், கனரக வாகனங்கள் எதிரும் புதிரும் வந்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.வாழைகுளம் கண்மாயிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அதனருகில் உள்ள சுகாதார வளாகம் பாழடைந்து ஒருவித அச்சத்துடன் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மெயின் ரோட்டின் கிழக்கு பகுதி வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. தற்போது மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் கட்டப்படும் வாறுகால் போல் கிழக்கு பகுதியிலும் நகரின் தெற்கு கடைசி வரை கழிவுநீர் வாறுகால் கட்டப்பட வேண்டும்.மம்சாபுரத்தை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து செல்ல போதி அளவிற்கு பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் அதிகம் பேர் பயணிக்கும் நிலை காணப்படுகிறது.பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயிலுக்கும், மழைக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

தேவை சுகாதா ர வளாகம்

கார்த்திகேயன், குடியிருப்பாளர்: இந்த வார்டில் பெண்களுக்கென நவீன சுகாதார வளாகம் இல்லாததால் கண்மாய் பகுதியை திறந்து வெளியாக பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.மெயின் ரோட்டிலும் உட்புற தெருக்களிலும் வாறுகால்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நீர்வரத்து ஓடையை தூர்வார வேண்டும். வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் பஸ் ஸ்டாப்பில் உள்ள சுகாதார வளாகத்தை புனரமைக்க வேண்டும்.

-போக்குவரத்து நெருக்கடியால் அவதி

சண்முக முருகன், குடியிருப்பாளர்: மம்சாபுரம் மெயின் ரோடு வழியாக தினமும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை, மாலை வேலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. முதியவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் மெயின் ரோட்டில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். -

குறைகள் சரி செய்யப்படும்.

-சுஜிதா மேரி, தலைவர், மம்சாபுரம் பேரூராட்சி: சேதமடைந்த மெயின் ரோடு புதிதாக போடப்பட உள்ளது. மெயின் ரோட்டில் கிழக்கு பகுதியில் வாறுகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாயக்கூட தண்ணீர் தொட்டியை சீரமைக்கப்படும். நீர்வரத்து ஓடையை தூர் வரவும், சுகாதார வளாகத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினசரி தூய்மைப்பணி மேற்கொள்ள தூய்மை பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ