மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு
ராஜபாளையம்:விருதுநகர்மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி 13 பவுன் நகைகளை நுாதன முறையில் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் கூரைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி காசி அம்மாள் 85. கணவர் இறந்த நிலையில் தனியாக வசிக்கிறார். இவரது மகன்கள், மகள்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேற்று மதியம் 30 வயதுள்ள வாலிபர் காசி அம்மாள் வீட்டிற்குள் வந்து கழுத்து வலிக்கு பிசியோ செய்வதற்காக மகன் அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய காசி அம்மாளிளிடம் 'கழுத்து, கையில் எண்ணையை தேய்க்க வேண்டும் .அதனால் நகைகளை கழட்டி வைத்து விடலாம்' என கூறியுள்ளார். எனவே நகையை கழட்டி கொடுத்தார். சிறிது நேரம் பிசியோ செய்து விட்டு மூன்று தங்க செயின், 4 வளையல், 2 மோதிரம், கம்மல்கள் என 13 பவுன் நகைகளுடன் அந்த வாலிபர் மாயமானார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து மகன் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.எஸ்.பி., ப்ரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக் பாபு விசாரணை செய்தனர்.