உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓராண்டில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள்

ஓராண்டில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள்

சிவகாசி; சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஒரு ஆண்டில் 3056 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 741 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ் மற்றும் 85 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யக்கோரிய மனுவுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் பதிலளித்து உள்ளது. சிவகாசி, சாத்துார் வெம்பகோட்டை பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. ஆய்வில் விதிமீறல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து ஏற்படுவது தெரிய வருகிறது. தீபாவளிக்கு முன் பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்து, பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை கடைகள் முறையான அனுமதி பெற்றுள்ளதா, பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வருக்கு கருப்பசாமி என்பவர் மனு அளித்து இருந்தார். அந்த மனுவுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் ஆனந்த் அளித்த பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் சார்ந்த வசதிகளை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் போது தெரியவரும் முரண்பாடுகளுக்கு தொழிற்சாலைகள் சட்டம் 1948 ன் படி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கடும் முரண்பாடுகள் தெரியவந்தால், உற்பத்திக்கு தடை விதிக்கப்படுகிறது. 2024 ஜூலை 1 முதல் 2025 மார்ச் வரை பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் இருந்த 746 தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கடும் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 85 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் 873 குழு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 310 ஆலைகளுக்கு நோட்டீஸ் மற்றும் 23 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை