பயன்பாட்டிற்கு வராமலேயே புதர்மண்டிய பூங்கா
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு வராமலேயே புதர் மண்டி போனதால் செலவழித்த நிதி வீணானது. அருப்புக்கோட்டை நகராட்சியின் பல பகுதிகளில் மக்களின் பொழுது போக்கிற்காக அஜீஸ் நகர், மீனாம்பிகை நகர், ரயில்வே பீடர் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டன. பூங்காக்களை கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு சில பூங்காக்கள் மட்டும் மக்கள் பயன்பாட்டில் இருந்தன. முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டதால் பல பூங்காக்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே முட்புதர்கள் வளர்ந்து சேதமடைந்து விட்டன. ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் பூங்காவில் அமைக்கப்பட்ட விளையாட்டு கருவிகள் சேதம் அடைந்து விட்டன. பூங்கா முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து புதர் காடுகளாக காட்சியளிக்கிறது. இந்த பூங்காவிற்கு செலவழித்த 25 லட்சம் நிதியும் வீணானது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கு இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இருக்கின்ற பூங்காக்களை பராமரிப்பில் அக்கறை காட்டாத நகராட்சி புதியது புதியதாக பூங்காக்களை அமைக்கிறது. சேதமடைந்த பூட்டி கிடக்கும் பூக்கள் பராமரிப்புச் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.