சென்டர் மீடியனில் பூச்செடிகள் இல்லாததால் விபத்து அச்சம்
காரியாபட்டி : மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியினில் பூச்செடிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் எதிரில்வரும் வாகனங்களின் வெளிச்சத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலை ரோடு படு மோசமாக இருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் ரோடு சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தி ஒரு வழியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்பட்டது. தற்போது சென்டர் மீடியனில் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பூச்செடிகள் இன்றி உள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் இருந்த பூச்செடிகளும் வெட்டப்பட்டு உள்ளன.இரவு நேரங்களில் அதிகம் மிளிரும் விளக்குகளை எரிய விட்டு வருவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசுகின்றன. இதனால் நிலை தடுமாறி வாகனங்கள் விபத்தில் சிக்குவதால், அச்சத்துடன் சென்று வருகின்றனர். இவற்றை தடுத்து, எதிரே வரும் வாகனங்கள் ஓட்டிகளுக்கு கண்கள் கூசாமல் இருக்க சென்டர் மீடியனில் இடைவிடாமல் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.