ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் தேவை
காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிக அளவில் வெளி நோயாளிகள் வருவதால் தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்களை நியமிக்க எதிர்பார்க்கின்றனர். மல்லாங்கிணரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காய்ச்சல், தலைவலி, கர்ப்பிணிகள் என தினமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் போதிய டாக்டர் இல்லை. ஒரு டாக்டர் காலையில் அனைத்து நோயாளிகளையும் கவனிக்க முடியவில்லை.நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான நோயாளிகளை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். நான்கு வழி சாலை, விருதுநகர் சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கு இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்களை நியமிக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.