உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமனம் பட்டாசு வாங்க குவியும் வெளியூர் மக்கள்

சிவகாசியில் போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய கூடுதல் போலீசார் நியமனம் பட்டாசு வாங்க குவியும் வெளியூர் மக்கள்

சிவகாசி: சிவகாசியில் தீபாவளிக்காக பட்டாசு வாங்க வரும் வெளியூர் மக்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் கூடுதல் போலீசார் டிராபிக் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொழில் நகரான சிவகாசிக்கு பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு இரு நாட்களே உள்ள நிலையில் பட்டாசு வாங்குவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். சிவகாசியில் பெரும்பாலான ரோடுகளில் ஆக்கிரமிப்பு இருப்பதால் பொதுவாகவே இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம். இதை கட்டுப்படுத்துவதற்கு டிராபிக் போலீசார் பற்றாக்குறை என்பதால் பணியில் இருக்கின்ற குறைந்த அளவு போலீசார் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக டிராபிக் பணியிடத்திற்காக மட்டும் பட்டாலியன் போலீசார், ஹோம் கார்ட் என கூடுதலானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கிய சந்திப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், தீபாவளிக்காக நகரில் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாரையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரில் கூட்டம் அதிகமான இடங்களில் வருகின்ற மக்கள் நகை பணம், விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுடன் வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ