மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் தேவை...: விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 3 மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆன்மிகம், மருத்துவம், தொழில் நகரமாக விளங்கும் மதுரைக்கு நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.பஸ் கட்டணங்களையும், பயண நேரத்தையும் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதால் ரயில்களில் பயணிப்பதையே அதிகளவில் மக்கள் விரும்புகின்றனர். இதில் திருநெல்வேலி -மதுரை இடையே பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம் வழியாக மிகவும் குறைந்த அளவு ரயில்களே இயங்குகிறது.முன்பு மதுரை- செங்கோட்டை இடையே தினமும் 3 தடவை பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது ஒரு தடவை மட்டுமே மதுரைக்கு நேரடி ரயில் இயங்குகிறது.செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 6:50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரை இயங்கி வந்த ரயில் தற்போது மயிலாடுதுறை செல்வதால் பயணிகள் கூட்டம் இரு மடங்கு அதிகரித்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் செங்கோட்டையில் மதியம் 3:50 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்த ரயில் தற்போது குருவாயூரிலிருந்து இயக்கப்படுவதால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் உட்கார்ந்து பயணிக்க இடம் கிடைக்காத நிலை உள்ளது.இதில் தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் இந்த ரயில்களில் உயிரை பணயம் வைத்து தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இத்தகைய சிரமங்களை தவிர்க்க மதுரை- செங்கோட்டை இடையே தினமும் 3 தடவை பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மதியம் 3:00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மாலை 6:30 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்து மறு மார்க்கத்தில் அங்கிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் கோயமுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் வரும் விருதுநகர், தென்காசி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள். இதேபோல் செங்கோட்டையில் மதியம் 12: 45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை வரும் பாசஞ்சர் ரயிலை மீண்டும் இரவு 6:30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 10:00 மணிக்கு செங்கோட்டை சென்று அடைந்து மீண்டும் அங்கிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:00 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் கூடுதல் டிரிப்பாக இயக்க வேண்டும். இதேபோல் கோவையில் மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:35 மணிக்கு மதுரை வரும் ரயிலை செங்கோட்டை வரை தடநீட்டிப்பு செய்து இரவு 11:30 மணிக்கு செங்கோட்டை சென்றடைந்து, மறு மார்க்கத்தில் அங்கிருந்து அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு காலை 6:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் இயக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் பாலக்காடு- தூத்துக்குடி ரயிலில் வரும் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டம் மக்களும் பயனடைவார்கள். மேலும் மதுரையில் தினமும் காலை 6 :45 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பையும் 3 மாவட்ட மக்கள் பெறுவார்கள். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகமும், மக்கள் பிரதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.