| ADDED : டிச 28, 2025 05:49 AM
நரிக்குடி: நரிக்குடி அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விரைவில் மீண்டும் துவங்க தொழில் முனைவோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். நரிக்குடி முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள பகுதி. விவசாயம் இல்லாத நேரங்களில் வெளியூர்களில் பிழைப்பு தேடியும், கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். அப்பகுதியில் தொழில் இல்லாததால் பெரும்பாலானோர் குடியிருப்புகளை காலி செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழில் வளங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் நரிக்குடி அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4 தாசில்தார்கள், 12 சர்வேயர்கள் வி.ஏ.ஓ.,க்கள், தலையாரிகள் என வருவாய் துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். 914 ஏக்கர் வரை நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயம் பாதிக்கப்படுவதாக ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அப்பகுதியில் சிப்காட் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மாற்றுப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது நிலம் எடுக்கும் பணி முடங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் தொழில் வளம் இல்லாமல் பலர் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தொழில் செய்ய வாய்ப்பு இருந்தும் செய்ய முடியாமல், முனைவோர் பலர் வெளியூர்களுக்கு செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிப்காட் அமைத்து, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். ஓராண்டாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். விரைந்து, சிப்காட் அமைக்கும் பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.