அ.தி.மு.க.,வினர் மோதலில் துப்பாக்கி சூடு: செயலர் கைது
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றிய அ.தி.மு.க.,வினர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் இரு அணிகளாக செயல்படுகின்றனர். ராஜேந்திர பாலாஜி அணியை சேர்ந்த ஒன்றிய செயலர் பூமிநாதன் மாற்றப்பட்டு, ராஜவர்மன் ஆதரவாள-ரான சந்திரனுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணியினருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.இந்நிலையில், விளம்பரங்கள், சமூக வலைதளங்களில், ஒன்றிய செயலர் என பூமிநாதன் பதிவிட்டு வந்தார். இதற்கு தற்போதைய ஒன்றிய செயலர் சந்திரன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராஜேந்திர பாலாஜியை விமர்சனம் செய்திருந்தார். இதனால், பூமிநாதன் காரசாரமாக பதிலளித்திருந்தார். இருவருக்கும் கருத்து மோதல் நிலவியது. ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் பிரபாத், பூமிநாதனுக்கு ஆதரவாக பதிவிட்டார். இதுதொடர்பாக போனில் சந்திரன், பிரபாத் கடுமையாக பேசிக்கொண்டனர். நேற்று காலை ஒன்றிய செயலர் சந்திரன் உள்ளிட்ட 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நரிக்குடி கல்விமடையில் உள்ள பிரபாத் வீட்-டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. சந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் பிரபாத் மகன் மிதின் சக்கரவர்த்தியை தாக்கி, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்காப்புக்காக பிரபாத் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். சந்திரன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடினர். வி.ஏ.ஓ., ரகுநாதன் அ.முக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி பிரபாத் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஒன்றிய செயலர் சந்திரன் உட்பட ஐந்து பேர் மீது பிரபாத் தனியாக புகார் கொடுத்தார். சந்திரன் ஆதரவாள-ரான தாமரைக்குளம் கிளைச் செயலர் தனுஷ்கோடியை போலீசார் கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்-றனர்.