தண்ணீரின்றி வறண்ட ஆனைக்குட்டம் அணை
சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மழை சீசனிலாவது தண்ணீர் வந்து அணை நிரம்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை. மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை. மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருவி வீணாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே அடுத்த மழைக்காலங்களில் அணைக்கு தண்ணீர் வந்து நிரம்ப வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.