தடை பிளாஸ்டிக் தயாரிப்பு, பதுக்கல், விற்பனை தடுக்க ஒத்துழைப்பதில்லை: உணவு பாதுகாப்புத்துறைக்கு, நகர், உள்ளாட்சி நிர்வாகங்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு, பதுக்கல், விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு, நகர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள நகர், புறநகர், கிராமங்களில் கடைகள், உணவகங்கள், பலகாரக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு தொழில் வரி செலுத்தி செயல்படும் கடைகளில் தடை பிளாஸ்டிக் உபயோகத்தில் இருப்பதை அலுவலர்கள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் தங்கள் எல்கை பகுதிகளில் எவ்வித ஆய்வுகளும் நடத்துவதில்லை. மாறாக ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடுத்து நிறுத்தி விட்டது போன்ற செய்திகளை வெளியிடுகின்றனர்.ஒவ்வொரு தாலுகாவிலும் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து குட்கா பயன்பாட்டை தடுக்க சோதனை செய்து வருகின்றனர். இவர்கள் ரோடு ஓரத்தில் குட்கா உபயோகிப்பவர் முதல் சில்லறை விற்பனை கடைகள், கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால் உணவுப்பாதுகாப்புத்துறையினரின் சான்றிதழ் பெற்று இயங்கும் கடைகள், உணவகங்களில் தடை பிளாஸ்டிக் படுஜோராக நடக்கிறது.ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கி சோதனை செய்யும் அளவிற்கு உணவுபாதுகாப்புத்துறையில் போதிய குழுக்கள் இல்லை. மேலும் தடை பிளாஸ்டிக் பயன்பாட்டை தங்கள் எல்கையில் தடுக்க வேண்டிய நகர், உள்ளாட்சி நிர்வாகங்களில் போதிய எண்ணிக்கையில் அலுவலர்கள் இருந்தும் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அழைத்தால் யாரும் வருவதில்லை. இதனால் தடை பிளாஸ்டிக் பயன்பாடு பெரிய வியாபாரிகள் முதல் சிறு கடைகள் வரை தடையின்றி சர்வசாதரணமாக நடக்கிறது.தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.இது போன்ற வெறும் விழிப்புணர்வு விளம்பரங்கள் துவக்கி வைப்பது மட்டும் போதாது. தடை செய்யப்பட்ட பொருள் தடையில் தான் இருக்கிறதா, சாதாரணமாக கிடைக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.மாவட்டத்தின் நகர், புறநகர், ஊராட்சிகளில் அந்தந்த நகர், உள்ளாட்சி நிர்வாகத்தினரும், உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களும் இணைந்து தடை பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடுக்க வணிக வளாகங்கள், சில்லறை, மொத்த விற்பனை கடைகள், உணவகங்களில் தொடர் சோதனை செய்து நடவடிக்கை வேண்டும்.