உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவுசிகா நதி புனரமைப்புக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றுவது அவசியம் முழுக்கொள்ளளவு அடிப்படையில் துார்வாருமா நீர்வளத்துறை

கவுசிகா நதி புனரமைப்புக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றுவது அவசியம் முழுக்கொள்ளளவு அடிப்படையில் துார்வாருமா நீர்வளத்துறை

விருதுநகர்: விருதுநகரில் கவுசிகா நிதியை ரூ.20.44 கோடியில் புனரமைக்கும் பணிக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுக் கொள்ளளவு அடிப்படையில் துார்வார நீர்வளத்துறை முன்வர வேண்டும். விருதுநகரில் கவுசிகா நதியை ரூ.20.44 கோடியில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி, வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை ஆக. 5ல் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார். கவுசிகா நதியில் 11.50 கி.மீ., வரையிலான நீளம் வரை துார்வாரி சீரமைக்கப்பட உள்ளது. தடுப்பணை, குறுக்கு கட்டுமான பணிகளை புனரமைத்து தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும், நகரில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் எங்கெல்லாம் கலக்கிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, 1.60 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, நதியில் கலக்காமல் அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கும் பணிகளும் செய்யப்பட உள்ளன. இந்த புனரமைக்கும் பணியில் ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாகவும், விரிவாகவும் நடக்கவில்லை . ஆற்றின் மீது சைக்கிள் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், விளைநிலங்கள், பால் பண்ணை, குடியிருப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பிற்கு நோட்டீஸ் வழங்கவே இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எடுக்க உயர்நீதிமன்ற கடும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கவுசிகா நதிக்கு அது பொருந்தாது போல் நீர்வளத்துறையினர் உள்ளனர். இருப்பதை சரி செய்வோம் என பெயரளவுக்கு மட்டுமே இப்பணியை செய்கின்றனர். 1950ம் ஆண்டு வருவாய்த்துறை பதிவேடு அடிப்படையில் முழுக் கொள்ளளவை கணக்கில் கொண்டு நில சர்வே செய்து துார்வார வேண்டும். வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட குழாய் அமைப்பதாக கூறுவது, பல மாவட்டங்களில் தோல்வி திட்டம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குல்லுார்சந்தை அணை ஏற்கனவே கழிவுகளால் சூழ்ந்துள்ளது. அதை துார்வாராமல் கவுசிகா நதியை புனரமைப்பது வீண். சமூக ஆர்வலர் வீரப்பெருமாள் கூறியதாவது: இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆக்கிரமிப்பு அகற்றம் அவசியம். பராபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். 1950க்கு முன்பு உள்ள பதிவேடு அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும். தற்போது டிஜிட்டல் சர்வே செய்ததாக கூறுகின்றனர். அது எந்த ஆவண அடிப்படையில் செய்கின்றனர் என தெரியவில்லை. வருவாய்த்துறை அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி