மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு அரசு மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை கூலித் தொழிலாளி மாரிமுத்து 55. ஏப். 9ல் டூவீலர் விபத்தில் தலையில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி முளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ஜெயசிங் தலைமையில் டாக்டர்கள் சேகர், கணபதி வேல்கண்ணன் அறுவை சிகிச்சை செய்தனர்.நான்கு முதல் ஐந்து நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாரிமுத்துவின் சிறுநீரகம்,கண்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் மதுரை அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.ஏற்பாடுகளை டாக்டர்கள் அரவிந்த்பாபு, அன்புவேல், இருப்பிட மருத்துவ அதிகாரி ஸ்ரீதரன், செவிலிய கண்காணிப்பாளர் ரேவதி ஆகியோர் செய்தனர். மருத்துவமனை சார்பில் இறந்தவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.டீன் ஜெயசிங் தலைமையில் டாக்டர்கள் மாலை அணிவித்தும், நர்சுகள் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அருப்புக்கோட்டை தாசில்தார் செந்தில்வேல், ஆர்.ஐ., சொர்ணலட்சுமி, ஆர்.டி.ஓ., கனகராஜ் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.