மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயற்கை சுற்றுலா மேம்படுத்தப்படுமா
மாவட்டத்தின் மேற்கு பகுதி நகரங்களான தேவதானம், ராஜபாளையம், மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகள் பசுமையாகவும், நரிக்குடி திருச்சுழி, வீர சோழன், அருப்புக்கோட்டை பந்தல்குடி போன்ற பகுதிகள் கடும் வறட்சி பகுதிகளாகவும், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகள் அதிக வெயில் காணப்படும் பகுதியாகவும் உள்ளது.விவசாயத் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், அச்சு தொழிலாளர்கள் என பல ஆயிரம் ஏழை எளிய மக்களும், இயற்கை ஆர்வலர்களும் தங்கள் வார விடுமுறை நாட்களில் மலையடிவார பகுதிகளான சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், செண்பகத் தோப்பு, தாணிப்பாறை பகுதிகளில் மழைக்காலங்களில் குளித்து மகிழவும், மலைக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் வருகின்றனர்.ஆனால் இத்தகைய மலை அடிவாரப் பகுதிகளில் எளிதில் சென்று வர போக்குவரத்து வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் குற்றாலம், பாபநாசம் போன்ற நீர்நிலை பகுதிகளுக்கு ரயில் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ள நிலையில் அங்கு ஒரு இயற்கை பூங்கா அமைக்க வேண்டும். சாம்பல் நிற அணில்கள் மியூசியம் அமைத்து அங்கு வரும் மக்களுக்கு வனத்தின் அவசியத்தை எடுத்துக் கூறலாம்.கொரோனா ஊரடங்கு காலத்தில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவிற்கு மக்கள் அனுமதிக்க படாத நிலை இன்றளவும் நீடிக்கிறது. இங்கு மக்களை அனுமதிப்பதில் வனத்துறைக்கும் , பொதுப்பணித்துறைக்கும் ஒத்துழைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விளையாட்டு பூங்கா நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது. மாலை நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறது.இதே மேற்கு தொடர்ச்சி மலையின் மறுபகுதியான கேரளாவில் மாநில அரசு நிர்வாகம், வனத்துறை சார்பில் வன சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதனை ஒப்பிடுகையில் விருதுநகர் மாவட்டத்தில் 10 சதவீத அளவிற்கு கூட எந்தவித வனச்சுற்றுலா திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் தங்கள் விடுமுறை நாட்களை இனிதாக கழிக்க இடமின்றி குற்றாலம், பாபநாசம், மதுரை, ராமேஸ்வரம் போன்ற வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர்.இதனை தடுக்க நமது மாவட்ட எல்லையான தேவதானத்திலிருந்து துவங்கி மதுரை மாவட்ட எல்லை வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயற்கை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.