19 வயதிற்குள் ஆண்டிற்கு 800 பெண்கள் கர்ப்பம் கலெக்டர் தகவல்
விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 700 முதல் 800 வரை உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் 'மென்ஸ்ட்ரூபீடியா காமிக்' புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசுகையில், “நன்கு வளர்ச்சி அடைந்த விழிப்புணர்வு பெற்ற நமது மாவட்டத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் 200 - 300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 700 முதல் 800 வரை இருக்கிறது.இது இன்னும் விழிப்புணர்வுக்கான தேவை இருப்பதை காட்டுகிறது. பதின் பருவத்தில் ஏற்படக்கூடிய உளவியல், உடல் சார்ந்த மாற்றங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவையோடு அதனை அறிவியல் பூர்வமாக அணுகுதல் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இன்று பெண்களுடைய முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றம். அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிகமாக வருகின்றனர்.” என்றார்.மாவட்ட மனநல மருத்துவர் விதுபிரபா, சமூகநலத்துறை அலுவலர் ஷீலா சுந்தரி பங்கேற்றனர்.