சமுதாயக்கூடம் சேதம் விசேஷங்கள் நடத்த சிரமம்
சிவகாசி: சிவகாசி அருகே புதுக்கோட்டையில் சமுதாயக்கூடம் சேதம் அடைந்துள்ளதால் நிகழ்ச்சிகள் நடத்துவதில் மக்கள் சிரமப்படுகின்றனர். சிவகாசி அருகே புதுக்கோட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியினர் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்களை இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர். இந்நிலையில் சமுதாயக்கூடம் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. ஒரு சிலர் வேறு வழி இன்றி சேதமடைந்த இந்த கட்டடத்தில் தங்கள் விசேஷங்களை நடத்துகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்த இக்கட்டத்தின் அருகே பள்ளிகள், துணை சுகாதார நிலையம் உள்ளது. விசேஷ காலங்களிலோ மக்கள் நடமாடும் போதோ கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதம் அடைந்த சமுதாயக்கூடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.