உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தமிழகத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

தமிழகத்தில் மின் மீட்டர் தட்டுப்பாடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

விருதுநகர்:தமிழகத்தில் புதிய வீடுகள் மற்றும் பழைய மீட்டர் பழுதால் புதியது கேட்டு பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் 11 தலைமை பொறியாளர்களின் கீழ் கண்காணிப்பு பொறியாளர்களின் ஒருங்கிணைப்பில் மின் பகிர்மான பிரிவுகள் செயல்படுகின்றன. புதிய வீடுகள் கட்டும் போதும் சரி, பழைய மீட்டர் பழுது ஏற்பட்டு மாற்ற கோரும் போதும் சரி புதிய மீட்டர் வாங்க விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்த பின் இந்த மீட்டரை குறிப்பிட்ட கால அளவுக்குள் வழங்க வேண்டும் என மின்துறை வரையறுத்துள்ளது. நுாறு அடிக்குள் வயர் இருந்தால் அருகாமை என கருதி 7 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் மின் மீட்டர் வழங்கப்பட வேண்டும். மின்பாதை நீட்டிப்பு செய்து வயர் எடுக்க வேண்டும் என்றால் 60 நாட்கள் வரையிலும், டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்பாதை அமைக்க வேண்டியிருந்தால் 90 நாட்கள் வரையிலும் கால அளவு உள்ளது. இதற்குள் வீட்டில் மீட்டர் பெட்டி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அளவில் தற்போது ஒரு முனை இணைப்புக்கான மீட்டர் பெட்டி தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.இதனால் 30 நாட்களுக்குள் பெற வேண்டியவர்களே 2 மாதங்கள் வரை காத்திருக்கும் அவலம் உள்ளது. கால அளவு அதிகம் உள்ளவர்களுக்கு இன்னும் அதிக நாட்கள் ஆகிறது. ஆனால் மும்முனை மீட்டர் உடனடியாக கிடைத்து விடுகிறது. மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதால் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.மின் மீட்டர் தட்டுப்பாடு குறித்து மின் ஊழியர்கள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வற்புறுத்தி வருகின்றன. அவ்வாறு பொருத்தப்பட்டால் மின் கணக்கீட்டாளர்களின் பணி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோம் என்றனர்.இருப்பினும் மின் வாரியம் ஸ்மார்ட் மீட்டரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மின்வாரிய உயரதிகாரிகள் புதிய மின் மீட்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி