உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் -- -மானாமதுரை வழித்தடத்தில் தினசரி ரயில்கள் .. அவசியம் தேவை: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க எதிர்பார்ப்பு

விருதுநகர் -- -மானாமதுரை வழித்தடத்தில் தினசரி ரயில்கள் .. அவசியம் தேவை: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க எதிர்பார்ப்பு

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை ரயில்வே வழித்தடம் 1963ல் மீட்டர்கேஜ் பாதையாக உருவாக்கப்பட்டு சென்னை, நாகூர், கொல்லம் நகரங்களுக்கு ரயில்கள் தினசரி சேவையாக இயங்கி வந்தது. பின் 2013ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடத்தில் வாரத்தில் 6 நாட்கள் விருதுநகர்- - காரைக்குடி ரயிலும், வாரத்தில் 3 நாட்கள் செங்கோட்டை - -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும், வாரத்தில் 2 நாட்கள் எர்ணாகுளம்- - வேளாங்கண்ணி ரயிலும், வாரத்தில் ஒரு நாள் நாகர்கோவில்- - புதுச்சேரி ரயிலும் இயங்கி வருகிறது. இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக்கி 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை தினசரி ரயில் சேவை இயக்கப்படவில்லை. இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, மானாமதுரை தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு தினசரி ரயில் வசதிகளும் கிடைக்கவில்லை. இந்த வழித்தடத்திற்குப் பிறகு அகல ரயில் பாதையாக உருவாக்கப்பட்ட கொல்லம்- - செங்கோட்டை வழித்தடத்தில் தற்போது தினசரி சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் விருதுநகர்- மானாமதுரை வழித்தடத்தில் பல ஆண்டுகளாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி மக்கள் சென்னை செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் இயங்கும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழித்தட நகரங்களிலேயே நிரம்பி விடுவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்களுக்கு காட்சி பொருளாகவே பிற ரயில்கள் உள்ளது. ராமேஸ்வரம், திருச்சி, வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்ட நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த வழித்தடத்தை கண்டு கொள்ளவே இல்லை. தற்போது இப்பகுதி மக்கள் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி நகரங்களுக்கு அதிக அளவில் சென்று வரும் நிலையில் நேரடி ரயில் வசதி கிடைக்காமல் விருதுநகர், மதுரை சென்று தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூடுதல் பண விரயம், நேர விரயத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த வழித்தடத்தின் வழியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், திருவனந்தபுரம், பெங்களூரு, புதுச்சேரி நகரங்களுக்கும் தினசரி ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும். அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி மக்களும் பயனடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 25, 2025 09:41

வாசகரின் குமுறல்.. விருதுநகர் மானாமதுரை வழித்தடத்தில் ரயில் நிறுத்தம் மூன்று ஸ்டேஷன்கள் அருப்புக்கோட்டை மக்கள் அதிகம் பயணிக்கு ஒரு நகரம். மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கமதகுர் தூங்குகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் எரியூர் பகுதியை சார்ந்தவர். இவருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் வாக்குகள் செலுத்தி டில்லிக்கு அனுப்புகின்றனர். இன்று ரயில் இல்லை என கதறி கின்றனர். ஆயினும் இந்த மாற்று வழித்தடத்தில் அவ்வப்போது அநேக ரயில்கள் செல்கின்றன. முதலில் அருப்புக்கோட்டையில் பிடலின் போடச்சொல்லுங்கள். பின்னர் அருப்புக்கோட்டை சென்னை, அருப்புக்கோட்டை பெங்களூர் ரயில்கள் தானாகவே வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை