காரியாபட்டியில் அரசு மருத்துவமனை ரோடு சேதம் வாகனங்கள் செல்ல சிரமம்
காரியாபட்டி: காரியாபட்டியில் அரசு மருத்துவமனை ரோடு சேதமடைந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுவதால், சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் அரசு மருத்துவமனை வழியாக பள்ளத்துப்பட்டி, ஓம் சக்தி நகர், போலீஸ் ஸ்டேஷன், பை பாஸ், பிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த ரோடு பெயர்ந்து சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டதில், ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியவில்லை. குலுங்கி செல்வதால் மருத்துவ பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ரோடு சீரமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளமான இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டியுள்ளனர். பெரிய கற்களாக இருப்பதால் வாகனங்கள் பழுதாகும் நிலை உள்ளது. நடந்து செல்பவர்கள் இடறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரோடை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.