மேலும் செய்திகள்
பயன்பாடு இல்லாத கிராம சேவை மைய கட்டடம்
30-Dec-2024
காரியாபட்டி: குப்பை கொட்டப்பட்டு நிரம்பிய கிணறு, படு மோசமாக இருக்கும் அழகியநல்லூர் ரோடு, பயன்பாடு இன்றி கிடக்கும் மகளிர் சுய உதவி குழு கட்டடத்தால் மல்லாங்கிணர் வரலொட்டி மக்கள் சிரமத்தில் உள்ளனர். வரலொட்டியில் கிணற்றில் குப்பையை கொட்டி வருவதால் சேரும் சகதியுமாகி புதை குழியாகி, மரணக் கிணறு போல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. அழகிய நல்லூர் ரோடு படுமோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் கனரக வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடம் பயன்பாடு இன்றி, சேதமடைந்து வருகிறது. அங்குள்ள பொருட்கள் திருடப்படுகின்றன. ரோடு சீரமைக்க வேண்டும்
வெள்ளைச்சாமி, தனியார்ஊழியர்: வரலொட்டியிலிருந்து அழகியநல்லூர் ரோடு போடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது ரோடு சேதமடைந்து ஜல்லிகற்களாக உள்ளன. ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. அப்பகுதியில் தொழிற்சாலைகள் இருப்பதால் அடிக்கடி கன ரக வாகனங்கள் சென்று வருவதில் சிரமமாக உள்ளதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான கிணறு
கருப்பசாமி, தனியார் ஊழியர்: ஊருக்கு நடுவில் உள்ள கிணறு பயன்பாடு இன்றி போனதால் அதில் குப்பையை கொட்டி வருகின்றனர். தற்போது கிணறு மேவி அசுத்தமாக கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை. கழிவு நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இடறி விழுந்தால் அதோ கதி தான். ஆபத்தான கிணறை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. விபத்திற்கு முன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடத்தை சீரமைக்க வேண்டும்
செல்வம், தனியார் ஊழியர்: ரூ. பல லட்சம் செலவு செய்து மகளிர் சுய உதவி குழு கட்டடம் கட்டப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தினர். அதற்கு பின் பயன்பாடு இன்றி கிடப்பில் போடப்பட்டது. தற்போது தூசி படிந்து கட்டடம் சேதம் அடைந்து உள்ளது. அங்குள்ள பொருட்கள் காணாமல் போகிறது. சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பல லட்சங்கள் வீணாகி வருவதால் அவற்றை சீரமைத்து மாற்று அலுவலகமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Dec-2024