வீரசோழனில் பழுதான மினரல் பிளான்ட்
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் மினரல் பிளான்ட் ஒரு மாதமாக பயன்பாடு இன்றி கிடப்பதால் குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். நரிக்குடி வீரசோழனை சுற்றி உப்பு தண்ணீராக இருந்தது. குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இது போதுமானதாக இல்லை. தொடர்ந்து தண்ணீரின் சுவை மாறியதால் குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சந்தை திடலில் ரூ. பல லட்சம் செலவில் மினரல் பிளான்ட் அமைக்கப்பட்டது. ரூ. 5 கட்டணம் செலுத்தி மினரல் குடிநீரை குடங்களில் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் பழுது ஏற்பட்டு பயன்பாடு இன்றி உள்ளது. சீரமைக்க வேண்டி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது குடிநீருக்காக மக்கள் அல்லோலலப் படுகின்றனர். பள்ளி மாணவர்கள், கடைக்காரர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது குடிநீரை ரூ.12 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.