டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசு புழு ஒழிப்பு பணிகள், முதிர் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.அதன்படி திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் ரோடு, விருதுநகர் ரோடு பகுதியில் டூவீலர் ஒர்க் ஷாப் கனரக வாகனங்கள் ஒர்க் ஷாப்பில் ஆய்வு செய்து மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள டயர்கள், தெருக்களில் பயன்பாடின்றி கிடக்கும் உரல்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டது.மேலும் பஞ்சர் கடைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தி ஆகாத வெள்ளம் பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கமிஷனர் கூறுகையில், வீடு தேடி வரும் டெங்கு தடுப்பு பணியாளர்களிடத்தில் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மழைக்காலம் துவங்க உள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ள பொருட்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், பேரல்களில் கொசு புகாத வண்ணம் துணியினால் மூடி வைக்க வேண்டும், என்றார்.