பஸ் ஸ்டாண்ட் கழிவுநீரை குண்டாற்றில் விடுவதற்கான பணி துவக்கம் பக்தர்கள் அதிருப்தி
திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் புதிய பஸ் ஸ்டாண்ட் கழிவுநீரை வாறுகால் கட்டி ஆற்று அருகே விடுவதற்கான பணி நடப்பதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். திருச்சியில் உள்ள குண்டாறு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும் திதி கொடுப்பதற்கும் உகந்த புண்ணிய இடம். இங்கு திதி கொடுத்தால் காசி, ராமேஸ்வரத்தில் கொடுப்பதற்கு ஈடானது. அமாவாசை முக்கிய நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர். பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் அரசு மருத்துவமனை ரோடு வழியாக வரும் கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவுநீரில் தான் மக்கள் குளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது திருச்சுழி நரிக்குடி ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும்படி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வாறுகால் மூலம் ஆற்று அருகில் விடுவதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், விசேஷ நாட்களில் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையிலும், ஆற்றில் சுகாதாரக் கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாறுகாலை மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.