காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு
திருச்சுழி: திருச்சுழி பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தார்.திருச்சுழி பகுதிகளில் உள்ள உணவகங்கள்,பேக்கரிகள் ஆகியவற்றில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வீரமுத்து, தர்மர், அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். திருச்சுழி - காரியாபட்டி ரோட்டில் உள்ள 2 பேக்கரிகளில் தயாரிப்பு தேதி காலாவதி தேதியே குறிப்பிடப்படாத நிலையில் இருந்து அச்சு முறுக்கு, முறுக்கு உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் 18 கிலோ அல்வா, 2 கிலோ கேக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட அயோடின் கலக்காத உப்பு 20 கிலோ, மளிகை கடையில் 3 கிலோ கலர் அப்பளம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன்: அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் முழுமையாக இருக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் காலாவதியான மூல உணவுப் பொருட்களைக் கொண்டு சமைக்க கூடாது. சில்லறை விற்பனை கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய கூடாது. வடை, பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை ஈக்கள் மொய்க்காதவாறு கண்ணாடி பெட்டியில் அல்லது மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். காகிதங்களில் உணவு பொருட்களை மடித்து கொடுக்கக்கூடாது. அயோடின் கலக்காத உப்பினை பயன்படுத்த கூடாது. விதிகளை பின்பற்றாமல் தவறும் பட்சத்தில் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, கூறினார்.