ரூ.500, 1000 வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள்: கிருஷ்ணசாமி பேச்சு
சாத்துார்; 'தேர்தல் சமயத்தில் ரூ.500, 1000 தருவதாக கூறுவார்கள், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள்,'' என சாத்துாரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ண சாமி தெரிவித்தார். சாத்துார் ஊராட்சி ஒன்றியக் கிராமங்களான அணைக்கரைப் பட்டி, எம். நாகலாபுரம் ,நென்மேனி ,இருக்கன்குடி ,வாழவந்தாள்புரம் புதுப்பாளையம் சடையம்பட்டி சூரங்குடி ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடியேற்றி வைத்தார். இருக்கன்குடியில் அவர் பேசியதாவது: இருக்கன்குடி ஊராட்சியில் இருந்த மாரியம்மன் கோயில் நத்தத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்கு மாற்றப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறீர்கள். கோயில் மீண்டும் இருக்கன்குடி ஊராட்சிக்கு சொந்தமாக்கும் போராட்டத்தில் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடுங்கள். அது நம்மை மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடும். இந்த ஆட்சியாளர்கள் மதுக்கடைகளை மூட மாட்டார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் தான் மதுக்கடைகளை மூட முடியும். தேர்தல் சமயத்தில் ரூ500, 1000 தருவதாக கூறுவார்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நான் இருப்பேன். என்றார்.